வியாழன், 29 ஜனவரி, 2009

தமிழனைத் தாண்டிய சிறிலங்க உறவு

கண்மூடித்தனமாக தாக்குதலில் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி, அப்படி எந்தக் கோரிக்கையையும் விடுக்காதது மட்டுமின்றி, அவ‌ர் கொழும்புவில் இருந்து திரும்பியதும் விடுத்துள்ள அறிக்கையு‌ம், இந்திய-சிறிலங்க உறவில் தமிழர்களோ அல்லது அவர்களின் பிரச்சனைகளோ ஒரு பொருட்டல்ல என்பதையே தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது.

கொழும்பு புறப்படுவதற்கு முன்னர், அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வந்த செய்தியால், நிச்சயம் இவர் போர் நிறுத்தம் பற்றித்தான் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், கொழும்பு சென்று சிறிலங்க அதிபர் ராஜபக்சயை சந்தித்த அமைச்சர் பிரணாப், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்கள் அதிகம் கொல்லப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதாக வந்த செய்தியைத் தவிர, போர் நிறுத்தம் பற்றி ஏதும் பேசியதாக எங்கும் கோடிட்டுக் கூட காட்டப்படவில்லை.

தனது இலங்கைப் பயணம் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையிலும் சரி, அவர் சிறிலங்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய அயலுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையிலும் சரி, ‘போரினால் அப்பாவித் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதாக எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

போர் நடக்கும் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று உறுதிமொழியை மட்டும் பெற்றுக் கொண்டதாகத்தான் அயலுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

பலமான சிறிலங்க-இந்திய உறவு

இந்தியா, சிறிலங்கா இடையே ஆழமான, வலிமையான, இதமான உறவு மலர்ந்துள்ளதாக அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது பயணத்தில் குறிப்பிட்டதைப் போலவே, அமைச்சரின் இந்தப் பயணத்திலும் ‘இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமாக மேம்பட்டு வருவதாக’க் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, “தற்பொழுது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் உருமாற்றங்களுக்கு இடையே இந்த உறவு பலப்பட்டு வருவது மிக முக்கியமானது” என்று அயலுறவு அமைச்சக அறிக்கை அழுத்தமளித்திருப்பது, இந்த வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் பொருளென்ன என்று ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.

முற்றிலும் மாறிவிட்ட அணுகுமுறை!

இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக இதுவரை மத்திய (மன்மோகன்) அரசு கடைபிடித்துவந்த நிலையென்பது: போரினால் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம்தான் நிலைத்த, நீடித்த அரசியல்ரீதியான தீர்வு காண முடியும் என்பது. ஆனால் அந்த நிலை மாறிவிட்டது என்பதையே அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட தனித்த அறிக்கை காட்டுகிறது.

''I stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka, after twenty-three years of conflict. The President assured me that this was his intent. We will work together with the Government of Sri Lanka to enable all Sri Lankans, and particularly the Tamil community who have borne the burnt of the effects of the conflict, to lead normal lives as soon as possible,'' the Minister said in the statement which was also released here by the External Affairs Ministry.

அதாவது, ““23 ஆண்டுகளாக நடந்த மோதலில் பெற்ற இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு அரசியல் வாய்ப்பை அளித்துள்ளதாக நான் வலியுறுத்தினேன். தனது எண்ணமும் அதுதான் என்று அதிபர் (ராஜபக்ச) கூறினார். சிறிலங்க அரசுடன் இணைந்து, போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இயல்பு வாழ்வைப் பெற விரைந்து பணியாற்றுவோம்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுவரை இராணுவ நடவடிக்கைகள் தீர்வைத் தராது என்று கூறிவந்த நிலைமாறி, இராணுவ வெற்றிகள் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தும் என்று கூறியுள்ளார். எந்த அடிப்படையில் இதனைக் கூறுகிறார் அமைச்சர் பிரணாப் என்று தெரியவில்லை. சிறிலங்க அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் எதிரான போராட்டம் முறியடித்து பெறும் வெற்றி இயல்பு வாழ்வை (வடக்கில்) உறுதி செய்யுமா?

இதைத்தானே சிறிலங்க அதிபர் ராஜபக்சவும் கூறினார்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், “இராணுவ நடவடிக்கைகள் மூலம் அரசியல் தீர்வு காணும் வழி பிறந்துள்ளது” என்று ராஜபக்ச கூறினாரே? அதனை அன்றைக்கு எதிர்த்த மன்மோகன் அரசு, இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறதா?

அது மட்டுமா? போரினால் கடும் சீரழிவிற்கு உள்ளான வடக்குப் பகுதியின் மறுபுரணமைப்பிற்கும், உள்கட்டுமானம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரகடனமே செய்துள்ளார் பிரணாப் முகர்ஜி. திரிகோணமலையில் இந்தியாவின் தேச அனல் மின் கழகம் அமைத்துவரும் 500 மெகா வாட் மின் நிலையம் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்: இலங்கையின் உள்நாட்டுப் பணிகளில் இந்தியா நேரடியாக இறங்கும். எப்படி ஆஃ‌ப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஒப்புதலுடன் எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவோ அதைப்போன்ற ஒரு பணி கூட்டாண்மையை சிறிலங்க அரசுடன் செய்துகொள்ள மன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது என்பதே.

இதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஒடுக்க இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும். அது இராணுவத் தலையீடாகவும் ஆகலாம்.

ஆக போர் நிறுத்தம் செய்ய தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு, தமிழனைத் தாண்டிய ஒரு உறவை சிறிலங்க அரசுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது மன்மோகன் அரசு.

அப்படியானால் தீர்வைப் பற்றி பேசியதெல்லாம் என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறதா? அதுதான் அறிக்கையில் கூறப்படுள்ளதே... இந்திய சிறிலங்க ஒப்பந்தத்தின்படி, 13வது அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த உறுதி பெறப்பட்டுவிட்டதே!

தமிழினத்தின் தலைவர்களே, தமிழக. ஈழத் தமிழர்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

புதன், 28 ஜனவரி, 2009

இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.

தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று‌ம் சிறிலங்க அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இப்படி ஒரு செய்தி (பிரச்சாரம்) மூலம் சிறிலங்க இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை மறைக்கவும், அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என்று திசை திருப்பவும் முயன்றுள்ளனர்.

சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் குரலை, பேட்டி கண்டு எழுத்தாக ஒளி, ஒலி பரப்பி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு தொடர் பிரச்சாரத்தை செய்துவரும் அந்த பாரம்பரிய ஆங்கில நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தியை படிக்கும் எவரும், தமிழக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் நேற்று இரவு திடீரென்று இந்த அழைப்பை ராஜபக்ச விடுத்துள்ளார் என்றுதான் கருதுவார்கள். அப்படி ஒரு தலைப்பு. எப்பொழுது அவர் கூறினார் என்பதை மறைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது.

‘ஏசியன் டிரிபுயூனல்’ என்ற இணையத்தளத்திற்கு (இது அப்பட்டமான சிங்கள ஆதரவு இணைத்தளம் என்பதை அறிக) அதிபர் ராஜபக்ச அளித்துள்ள ஆங்கில பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.

“யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எவ்வாறு கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றனர் என்பதை நீங்களே அரசுப் பூர்வமாக இங்கு வருகை தந்து அவர்களைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனே” என்று ராஜபக்ச கூறினார் என்றுதான் அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்ச, ‘ஏற்கனவே விடுத்த அழைப்பை’ ஏதோ புதிதாக விடுத்த அழைப்பு என்பதுபோல காட்டி ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஒரு பிரச்சாரத்தையும் செய்துள்ளார்கள்.

அந்த ‘புகழ்பெற்ற இணையத் தளத்திற்கு’ அளித்த பேட்டியை, ஒரு ‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்று பெரிதுபடுத்தி, சிறிலங்க அரசுடன் இணைந்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் இந்த உண்மையின் காவலர்கள்.

இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்? ‘அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அடிப்படையற்ற ஒரு சொத்தை வாதத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணங்களில் ஆழ‌ப் பதிய வைக்க தங்களது செய்திகளையே பிரச்சாரமாக்கியுள்ளார்கள்.

இலங்கையில் கடும் போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை பாதுகாப்பு வளையம் என்று கூறி, அவர்கள் தங்கியிருந்த பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிக மருத்துவமனையையும் குறிவைத்து தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி, 400க்கும் மேற்பட்டோரை அழித்ததை மறைக்க இந்த கேடய வாதத்தை செய்திகளாக வீசியுள்ளார்கள்.

தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைக்கு வந்து, போர் நடக்கும் இடங்களில் நாடோடிகள் போல பிள்ளை, குழந்தைகளை தூக்கிக் கொண்டு காடுகளில் பதுங்கி வாழும் மக்களிடம் உண்மை என்ன என்பதை அவர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிபர் ராஜபக்சயின் விருப்பமாக இருந்தால், அதனை அதிகாரப்பூர்வமான வழிகளில் செய்திருக்கலாமே? அப்படிப்பட்ட அழைப்பை பேட்டியின் வாயிலாக, அதுவும் இப்படிபட்ட உலகப் பிரசித்துப் பெற்ற இணையத் தளத்திற்கு அளிக்கும் பேட்டியின் வாயிலாகவா அழைப்பை விடுப்பார்கள்?

ஒரு வாரத்திற்கு முன்னர் அயலுறவுச் செயலர் சி‌வ் சங்கர் மேனன் அங்கு சென்றாரே? கண்டிக்குச் சென்று ராஜபக்சயை சந்தித்தாரே. அப்பொழுது அவரிடம் இந்த அழைப்பை விடுத்திருந்தால், தமிழக சட்டப் பேரவையில் ‘அய்யகோ’ என்று தீர்மானம் போடாமல் தவிர்த்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

ஆனால் ராஜபக்சயின் பேட்டியை வெளியிட்ட இணையத்தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.

‘மிக அறிவார்ந்த ராஜதந்திர நடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்று கூறித்தான் பேட்டியைப் பற்றிய விவரிப்பை ஆரம்பிக்கின்றார் அதன் இதழியலாளர்.

முதலமைச்சர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது ‘போல’ ஒரு உருவகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது இந்த வார்த்தைகளே புலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையை படிப்பவர்கள் அந்த இணையத்திற்குச் சென்று படிக்கவா போகிறார்கள் என்ற அறிவார்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்டுள்ள செய்திப் பிரச்சாரம் இது.

இன்று நேற்றல்ல, கடந்த அக்டோபர் மாதம் முதல் போரை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் எழுந்த குரலோடு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதான் நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்பதே. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை சந்திக்கட்டும், உண்மையை அறியட்டும் என்றுதான் தமிழகத் தலைவர்கள் கோரி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ், இலங்கை செல்லும் அயலுறவு செயலருடன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தாரே? மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லையே?

உண்மையறிய தமிழ்நாடு தயாராகவே உள்ளது. ஆனால் சிங்கள இனவாத அரசு தயாராக இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட ‘எளிமையான’ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

குழந்தைகளும், பள்ளிச் சிறார்களும் நாளைய புலிகள் என்ற பார்வையே சிறிலங்க அரசிற்கும், அதன் முப்படையினருக்கும் உள்ளது என்பதை அறியாமல் இங்கு யாரும் ஈழப் பிரச்சனையை பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை சிங்கள சிறிலங்க அரசும், அதன் துதிபாடிகளும் உணர வேண்டும்.

கிழக்கில் உள்ள தமிழர்கள், மேற்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் வாழும் தமிழர்கள், சிறிலங்க இராணுவத்தின் கொலை வெறித் தாண்டவத்திற்கு பயந்து நாட்டை விட்டு கடல் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் என்று எல்லோருடனு‌ம் பேசி அறிந்துதான் இங்கு அரசியல் நடைபெறுகிறது, அவர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது.

சிறிலங்க அரசின் இன வெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்டுரை தீட்டிய சிங்கள இன பத்திரிக்கையாளர்களைக் கொன்று குவிக்கும், கடத்திக் காணடிக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இன வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல், அதற்கு எதிர்ப்பு காட்டாமல், அந்த ஆட்சி கொடுக்கும் விருதை பெற்றுக்கொண்டு புளங்காகிதம் அடையும் ‘பத்திரிக்கை தருமிகள்’ நடத்தும் இப்படிப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம் தமிழனத்தை திசை திருப்பும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.