சனி, 6 டிசம்பர், 2008

மும்பை தீவிரவாதிகளும் சாட்டிலைட் செல்போனும்


ராணுவத்தில் மட்டுமே அதிகம் பயன் படுத்தப் பட்டு வந்த சாட்டிலைட் போன் இப்பொழுது பயங்கரவாதிகளும் விரும்பும் சாதனமாக மாறியுள்ளது. மும்பை தீவிரவாதிகள் செல் போனுடன் சாட்டிலைட் போனையும் தங்களின் தகவல் தொடர்புக்கு பயன் படுத்தி உள்ளனர்.

சாட்டிலைட் போனும் செல் போனைப் போல்தான், ஆனால் அவை தகவல் தொடர்புக்கு செல் போன்களைப் போல் செல் போன் டவர்களைப் பயன்படுத்துவது இல்லை, மாறாக அவற்றின் ஒலியலைகள் சாட்டிலைட் மூலமாக செல்கின்றன.

செல் போனுடன் ஒப்பிடும் போது சாட்டிலைட் போன்களின் அளவும், எடையும் மிகவும் அதிகம். போனுடன் சிறிய ஆன்டென்னாவும் இணைக்கப் பட்டு இருக்கும்.

இப்பொழுது வெளிவந்துள்ள நவீன சாட் போனின் அளவு, 10 ஆண்டுகளுக்கு முன் வந்த செல் போன்களைப் போல் இருக்கும்.சாட் போனின் விலையும் அதிகம். பழைய மாடல் போன்கள் 10,000 ரூபாயிலும், புதிய மாடல்கள் 50,000 ருபாயிலும் கிடைக்கின்றது.

ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற குழுமங்கள் செல் போன் சேவையை வழங்குவது போல் சாட் போன் சேவையையும் க்ளோபல் ஸ்டார்,இரிடியம் மற்றும் துரயா என்ற மூன்று நிறுவனங்கள் வழங்கு கின்றன. இவற்றுள் துரயா நிறுவனம் மட்டுமே உலகம் முழுவதுமான சேவையை வழங்கு கின்றது.

மலை உச்சி, பாலைவனம் மற்றும் நடுக்கடல் இவை எவற்றில் இருந்தும் உலகின் எந்த மூலைக்கும் சாட் போனின் மூலம் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். நாம் செய்யும் கால்களின் மதிப்பும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.ஒரு நிறுவனத்தின் சாட் போனை வேறொரு நிறுவனத்தின் சேவைக்குப் பயன் படுத்த முடியாது. மும்பை தீவிரவாதிகள் துரயா சேவையையே பயன் படுத்தி உள்ளனர்.

சில நிறுவனங்கள் சாட் போனை வாடகைக்கும் கொடுக்கின்றன. ஒரு வாரத்திற்கான வாடகை 1200 ரூபாய் முதல் 2000 வரை.

சாட்டிலைட் போன் நிறுவனங்கள், ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு நிமிடத்திற்கு 7 ரூபாய் முதல் 99 ரூபாய்வரை வசூலிக்கின்றன. சாட் போனில் இருந்து லேன்ட்லைன் அழைப்பு மிக மிக அதிகம், ஒரு நிமிடத்திற்கு தோராயமாக 400 ரூபாய். எஸ்.எம்.எஸ் செய்தியும் அனுப்ப முடியும் அதற்கு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 25 ரூபாய்.

மும்பை தீவிரவாதிகள் கடல் வழியைப் பயன் படுத்தி உள்ளதால் சாட்டிலைட் போன்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன. அதன் மூலமே பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினருடன் பேசியுள்ளனர்.