வெள்ளி, 12 டிசம்பர், 2008

புதையுண்டு போன அசிங்கப் பக்கங்கள்!


கட்டுரை ஆசிரியர் : விதரன்
நன்றி : ஜூனியர் விகடன்

தமிழக அரசியல்வாதிகளை, 'கோமாளிகள்' என இலங்கை ராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா இழிவாக விமர்சித்தமை தமிழகத்தில் பெரும் கொதிப்பு உணர்வைக் கிளறி விட்டிருந்தாலும், அது இலங்கையில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் புதிதாகப் பெரிய கோபம் எதையும் ஏற்படுத்தவே இல்லை.

பேரினவாதத்தை நம்பி அரசியல் நடத்தும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை சுற்றி இத்தகைய இனத் திமிர்க் கொழுப்பேறிய அதிகாரிகளே நிலைகொண்டிருப்பதால், அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்! இதில் புதிதாக விசனப்படுவதற்கு ஏதுமில்லை என்பதே இங்குள்ள நிலைமை.

யார் இந்த சரத் ஃபொன்சேகா?

இலங்கை ராணுவத்தில் 1970 பிப்ரவரி 5-ம் தேதி சேர்ந்து, இப்போது 38 ஆண்டுகள் ராணுவ சேவையைப் பூர்த்தி செய்துவிட்ட இவருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் அநாகரிகமான, முரட்டுத்தனமான, ஒழுக்கக்கேடான விடயங்கள் அடங்கிய பக்கங்கள் பலவாகும்!

பேரினவாதத்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் போலவே, பேரினவாதம் பேசி செல்வாக்குத் தேடும் மூன்றாம் தர ராணுவ அதிகாரிகள் வரிசையில் முன்னிலை வகிப்பவர் ஃபொன்சேகா!

பூர்வாங்கப் பயிற்சியின் பின்னர் 1971 ஜூனில் தம்முடைய 21 வயதில் இரண்டாம் லெஃப்டினென்ட் ஆக இலங்கை ராணுவத்துக்குள் உள்வாங்கப்பட்டார் ஃபொன்சேகா. அன்று முதல் 2005-ல் ராஜபக்ஷே ஜனாதிபதியான இரண்டு வார காலத்தில் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது வரையான, சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட ஒழுக்காற்று விசாரணைகள் பலப்பல!

அளவுக்கு அதிகமாக மது அருந்தி அட்டகாசம், பெண்களோடு ஒழுக்கக் கேடாக நடந்தமை, அதிகார துஷ்பிரயோகம், இனத் துவேஷமாக செயற்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கும் மற்றும் ராணுவ ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளுக்கும் ஆளான முரட்டு ஆசாமி இவர்!

நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் ராணுவத்தின் பிரதம அதிகாரியாகவும் பணியாற்றிய ஜெனரல் சிறில் ரணதுங்க, 1978-ல் இவருடைய நடத்தைகளைத் தாங்க முடியாமல் இவருடைய 'பர்சனல் ஃபைலில்' 'பெண்களோடு மோசமாக நடக்கும் ஆசாமி' என்று குறிப்பெழுதி வைத்தார்.

2004-ம் ஆண்டில் இவர் யாழ் ராணுவத் தளபதியாக இருந்தபோது, அவசரத் தொலைத்தொடர்புக்காக ஒரு 'சட் லைட்' தொலைபேசியை அவருக்கு ராணுவம் வழங்கியிருந்தது. ஆனால், அடுத்த ஓரிரு மாதங்களில் அந்தத் தொலைபேசிக்கான 'பில்' கட்டணம் பல லட்சம் ரூபாயைத் தாண்டியது. மேலதிகாரிகள் விசாரித்ததில், அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகளுடன் தினசரி மணிக்கணக்கில் அவர் அலட்டியதற்கான கட்டணம்தான் அது என தெரியவந்தது. இதுபற்றி அப்போதைய ராணுவத் தளபதியின் விசாரணையில் முழுவிவரமும் அம்பலமாகி, பொன்சேகாவின் முகமூடி கிழிந்தது.

எவ்வளவு குசும்பு பண்ணினாலும் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஃபொன்சேகா, எந்த அரசியல்வாதிகளின் பின்னால் போகவும் பின் நிற்காதவர் என்று பெயரெடுத்தவர்!

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த சமயம், தமக்கு ராணுவத் தளபதி பதவியை வாங்கித்தர அவரிடம் சிபாரிசு செய்யும்படி பல அரசியல்வாதிகளை நாடினார் ஃபொன்சேகா. அச்சமயம் சந்திரி காவின் வலது கை யாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இதைப் பகிரங்கமாகப் போட்டு டைத்துள்ளார்.

இயல்பாகவே தமிழர் துவேஷம் கொண்ட ஃபொன்சேகாவுக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, புலிகளுடன் அமைதிப் பேச்சுகளை நடத்தியது பிடிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்... யாழ் ராணுவத் தளபதி என்ற தம்முடைய பதவியைப் பயன்படுத்தி அமைதிப் பேச்சைக் குழப்புவது, அதன்மூலம் ரணிலின் எதிரியான ஜனாதிபதி சந்திரிகாவை கையில் போட்டு, ராணுவத் தளபதி பதவியைத் தாம் அடைவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தத் திட்டமிட்டார்.

முதலாவது எத்தனத்தில் வெற்றியீட்டிய ஃபொன்சேகாவுக்கு அடுத்த விடயத்தில் வெற்றி கிட்டவில்லை.

அமைதிப் பேச்சுக் காலத்தில் யாழ்குடா நாட்டில் போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்காக இலங்கை அரசுத் தரப்பும் புலிகளும் சேர்ந்து ஓர் உபகுழு அமைக்கப்பட்டது. அதில் யாழ் ராணுவத் தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடம் கிடைத்தது.

அமைதிப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த புலிகளை பயங்கரவாதிகள் என்றும், ராணுவம் கெடுபிடிகளைத் தளர்த்தினால், அது பயங்கரவாதி களுக்கு அரசியல் வெற்றியாகிவிடும் என ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் ஃபொன்சேகா அறிக்கையிட்டு அதைப் பகிரங்கப்படுத்தினார். இதனால் உபகுழு செயலிழந்து, அமைதி முயற்சிகள் முறிந்து போயின.

ரணிலின் அமைதி முயற்சிகளை ஃபொன்சேகா திட்டமிட்டு நாறடித்த போதிலும், அவரை சந்திரிகா தமக்குக் கிட்ட எடுக்கவில்லை. இதற்கு ஃபொன்சேகா மது மற்றும் மாது விடயத்தில் பலவீனமானவர் என்பதே காரணம் என்கிறார்கள் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

ஆனால், 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் காட்சி மாற அடித்ததுயோகம்!

மஹிந்த ராஜபக்ஷே ஜனாதிபதியாக, அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷே இலங்கையின் பாதுகாப்புத் துறையில் ஏகபோக செல்வாக்கு உடையவரானார்.

கோட்டாவும் ஃபொன்சேகாவும் இலங்கை ராணுவத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். ஃபொன்சேகா மூன்றாவது அணியில் உள்வாங்கப்பட்டவர். கோட்டா நான்காவது அணியில் வந்து இணைந்தவர். கோட்டாவின் சீனியர் அதிகாரி ஃபொன்சேகா.

அத்தோடு, கோட்டாவின் கீழ் செயற்பட்ட பல ராணுவ அணிகள், புலிகளின் கைகளில் சிக்கி அழிய, அதனால் கோட்டாவுக்கு ராணுவத்திலிருந்து முற்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு உதவியவர் ஃபொன்சேகா எனவும் கூறப் படுகின்றது.

ஓய்வுபெற்ற கோட்டாபய, அமெரிக்கா சென்று அந்நாட்டுப் பிரஜையானார். அங்கு இரவுக் காவலாளராகவும் பின்னர் உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். கோட்டாபய, அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற அதேசமயம் ஃபொன்சேகா, அமெரிக்காவில் தம்முடைய பிள்ளைகளுடன் நிரந்தரமாகத் தங்கி வாழக்கூடிய கிரீன் கார்ட் பெற்றுக்கொண்டார்.

தமையனின் (மஹிந்த) ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து, கோட்டாபய நாடு திரும்பி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க... ஃபொன்சேகா ராணுவத் தளபதியானார். அந்தக் கூட்டுதான் இப்போது சக்கைப்போடு போடுகின்றது!

இவ்வளவு அட்டகாசம், அராஜகம் பண்ணும் ராணுவத் தளபதியை அண்ணன் மஹிந்தாவும் தம்பி கோட்டாபயவும் மற்றைய இலங்கை அரசுத் தலைவர்களும் ஏன் சகித்துக் கொள் கின்றார்கள் என்ற கேள்வி நியாயமானதே!

இலங்கை இன்று மோசமான மனித உரிமை மீறல் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. வெள்ளை வானில் வந்து அநாயாசமாக ஆட்களைக் கடத்துவது, கடத்தியோரைப் பணயமாக வைத்து கப்பம் அறவிடுவது, சட்டவிரோதப் படுகொலைகள் என்று பல்வேறு அராஜகங்களும் கொடூரங் களும் புலி எதிர்ப்புப் போரின் பெயரால் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!

இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுவது யார் என்பது 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல, அவற்றை முன்னெடுத்துவரும் அண்ணன் - தம்பி ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இப்படித் தனக்குக் கீழ் ரகசிய அணிகளை வைத்து ஒப்பேற்றும் ஒரு ராணுவத் தளபதிக்கு எதிராக, ஆட்சித் தலைமை எப்படி நடவடிக்கை எடுக்கும்?!

ஆக, இலங்கை ராணுவத் தளபதியின் வெறித்தனமான மேற்படிப் பேச்சுக்கு எதிராக இந்தியத் தலைவர்கள், குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் எந்தளவுக்குக் கிளர்ந்து எழுந்தாலும், ஆகப்போவது ஒன்றுமில்லை!

தம்முடைய மிக நெருங்கிய கூட்டாளியான கொழும்புக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் வழமையான தம்முடைய தனிப்பட்ட நட்புறவுச் சந்திப்பின்போது, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் வருத்தம் தெரிவித்தார் என்று வெறும் வாய்ப்பந்தலோடு இந்த விடயம் அடங்க வேண்டியது தான். இதற்கு அப்பால் இவ்விவகாரத்தில் கொழும்பில் எதுவும் நடக்காது என்பது நிச்சயம்! ஏனென்றால், அரசுத் தலைமை யிடம் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு இருக்கும் செல்வாக்கு அத்தகையது..!