ஒருவர் தொடர்ந்து முன்னேறுகிறார் என்றால் அவரிடம் இரண்டு அரிய குணங்கள் இருக்கும். ஒன்று துணிவு. இன்னொன்று தொடர் முயற்சி.
உண்மையாய் இருக்க எந்த அளவிற்குத் துணிச்சல் வேண்டுமோ அந்த அளவிற்கு நேரத்தை வீணாக்காமல் உழைக்கவும் அல்லது முயற்சி செய்யவும் துணிவு வேண்டும். விட்டுவிடாமல் தொடர்ந்து உழைப்பதில்தான் உறுதியான வெற்றி இருக்கிறது. உளியை வைத்துக் கல்லை உடைத்ததும் உடனே உடைந்து விடுகிறது. ஆனால், இதற்கு முன்பு ஆயிரம் முறைகளுக்கு மேல் உளியின் மீது ஓங்கி ஓங்கிச் சுத்தியலால் அடித்தால்தான் கடைசி அடியில் கல் இரண்டாகப் பிளக்கிறது என்பதுதான் உண்மை.
இதே போலத்தான் தொடர் முயற்சிகளும் பலன்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அடுத்த சில மாதங்களில் உறுதியாகப் பலன்கள் கிடைக்கும். அதுவரை பொறுமையாக உழைக்கத்தான், முயற்சி செய்யத்தான் துணிவு வேண்டும்.
இலட்ச ரூபாய் விலையில் கொண்டு வந்த கார் எப்படி இருக்கும் என்பதை எவரிடமும் முன்கூட்டியே ரத்தன் டாடா பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், கார் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்ந்து சேகரித்தார். இதை இரகசியமாகப் பாதுகாத்து வந்தார். முடிவில், முதல் காரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அவர் சொன்னார்: ``வாக்குறுதி கொடுத்தால் கொடுத்ததுதான்.''
காரணம், இன்றைய காலகட்டத்தில் இலட்ச ரூபாய் விலையில் தரமான காரைத் தருவது என்பது இயலாத காரியம். ஆனால், துணிச்சல் இருந்தால் ஹென்றி போர்டு போல ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தரமான கார்களைத் தயாரிக்க முடியும். இதனால் தயாரிப்புச் செலவு குறைந்து குறைந்த விலையில் கொடுத்து விடலாம் என்று நம்பினார். இதற்காக ரத்தன் டாடா எடுத்துக் கொண்ட துணிவான தொடர் முயற்சியால் முதல் காரை மக்களிடம் காட்டி நம்பிக்கையைப் பெற்றார்.
தொடர்ந்து உழைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்யவும் துணிவு ஏன் வேண்டும்? ஏனெனில், நமது எண்ணங்களையும், செயல்களையும் இறைவனின் அன்புடன் கூடிய நல்லறிவு ஆட்சி செய்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத தடைகளோ, அல்லது நாம் விரும்பாத முடிவுகளோ ஏற்படும்போது மனசு ச(வ)லித்து விரக்தி ஏற்படுகிறது. அப்போது நாம் `போதும்' என்று உட்கார்ந்து விடக் கூடாது. இதற்கு அடுத்த இரண்டாவது முயற்சியில் கூடத் தீர்வு இருக்கலாம். அல்லது ஆழ்ந்து சிந்திக்க நல்ல தீர்வுகளை உண்டாக்கலாம். எனவே, தொடர்ந்து முயற்சி செய்வதில் கவனமாக இருங்கள். இதனால் தகுதிகளை அதிகரித்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள். தொடர்ந்து உழைத்தால் கண்டிப்பாக அறிவு விருத்தியாகி, புதிய பாதைகளில் நம்பிக்கையுடன் செல்ல ஆர்வமாக இருப்பீர்கள். சோம்பலாக இருக்கத் துணிவு தேவையில்லை. சூழ்நிலை எப்படி இருந்தாலும் எந்த நாளையும் வீணாக்காமல் செயல்களைச் செய்து முடித்த நாளாக மாற்றத்தான் துணிவு வேண்டும். துணிச்சலுடன் தொடர்ந்து உழைப்பவர்களை பாகுபாடு எதுவும் பார்க்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து விடும், இந்த இரு மகா சக்திகளும். நயாகரா நீர்வீழ்ச்சியில், கயிறுகட்டி அதன் குறுக்கே கடந்த சார்லஸ் பிளாண்டினுக்கு இருந்தது துணிவும், தொடர் முயற்சியும்தான். தரையில்தான் கம்பங்களுக்கு இடையே கயிறு கட்டி அதில் பயிற்சி பெற்றார். இதனால் முதல் முயற்சியிலேயே நயாகராவின் குறுக்கே கயிற்றில் நடந்து வெற்றி பெற்றார்.
தேசிய வங்கிகளில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் பணம் சேமித்து வருகிறவர், கட்டி முடித்ததும் முழுப் பணத்தையும் வட்டியுடன் வாங்கிக் கொண்டு ஒரே நாளில் வீட்டிற்கு வருவார். இந்தப் பணம் ஒரே நாளில் காசோலை கொடுத்து வாங்கிய பணமா? பத்து ஆண்டுகள் மற்ற பணப் பிரச்னைகளையும் சமாளித்து கடன்கள் இல்லாமல் வாழ்ந்தும் சேமித்த பணம் இது. இதனால் சம்பந்தப்பட்ட ஊர் மிகவும் மகிழ்ச்சியாக இந்தப் பணத்தை அடுத்து நிலங்களில் முதலீடு செய்வார்.
நாமும் தொடர்ந்து உழைப்பதில் சூழ்நிலைகளைப் புறக்கணித்து கவனமாக இருந்தால் வட்டியுடன் கூடிய முதல் போல் மாபெரும் வெற்றி பெறுவோம்.