இந்த உலகமே செய்து முடிக்கப்பட்ட சாதனைகளைப் பற்றித்தான் பேசும். உண்மை இப்படி இருக்கும்போது மனக்கவலையினால் சிலர் செயல்படாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுள் பலர் சிறிது உற்சாகம் ஊட்டிக் கொண்டு தினமும் விடாமுயற்சியுடன் வாழ்கின்றனர். உலகின் நான்காவது மகாக்கோடீஸ்வரரான உருக்கு ஆலை மன்னர் லட்சுமி மிட்டல்' கடினமாக வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனால் தினமும் குறிப்பிட்ட நேரம் வரை முக்கியமான வேலைகளை முதலில் செய்து முடித்து செயல்படும் மனிதர்களுள் ஒருவனாக என்னை மாற்றிக் கொண்டேன். இதுதான் என்னைத் தொடர்ந்து உழைப்பில் கவனம் செலுத்த வைத்தது என்று சொல்லியுள்ளார்.
சோம்பலையும், வசதிக் குறைவையும் மீறி இப்படிச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் பலர் தற்பெருமையினாலும், பொறாமைக் குணத்தாலும் தொடர்ந்து செயல்படாமல் பாதியிலேயே நிற்கின்றனர்.
நம்மைப் பின்னுக்கு இழுத்து நிற்கவைக்கும் சக்திகளுள் தற்பெருமையும், பொறாமையும் முதல் இரு இடங்களில் உள்ளன. இவற்றை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.
பெப்சி நிறுவனத் தலைமை அதிகாரியான இந்திரா நூயியிடம் தற்பெருமையும், பொறாமைக் குணமும் இல்லை. நூயியிடம் அதனால்தான் சுயமோகமோ மனச்சுமையோ இன்றி தொடர்ந்து செயல்பட்டு உலகப் புகழ்பெற்ற மென்பான நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இந்திராவால் நான்கு வருடங்களாகத் தொடரமுடிகிறது.
`நானே வல்லவன்' என்று கூறி உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவர் முகமது அலி. வென்ற பிறகு தம்முடைய பெருமைகளைக் கூறி அவர் தற்பெருமை அடித்துக்கொண்டதில்லை.
ஆனால், இந்திரா நூயி என்ற இந்த சென்னைப் பெண்மணியோ உயர் பதவியை அடைவதற்கு முன்பும் சரி அடைந்த பின்பும்சரி, தம்மைப்பற்றி எதையுமே பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை. எப்படி இவரால் தற்பெருமையின்றி வாழ முடிகிறது? வியப்புத்தான்!
ஜே.கே.ரௌலிங் என்ற பெண்மணி தம்முடைய முதல் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு காபி உணவு விடுதியில் தமது முதல் நாவலான ஹாரிபாட்டர் நாவலை எழுதி முடித்தார். கணவனால் கைவிடப்பட்டவர். ஏழே ஏழு ஹாரிபாட்டர் நாவல்கள் மூலம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை விட இவரிடம் அதிகம் சொத்துகள் சேர்ந்துவிட்டன. முதல் மூன்று நாவல்களின் மூலம் இந்தச் சிறப்பை அடைந்தாலும், அந்தப் பெருமைகளையே நினைத்து அங்கேயே நின்று விடாமல் அடுத்த நான்கு ஹாரிபாட்டர் நாவல்களையும் சுவை குன்றாமல் எழுதி முடித்து வெற்றிபெற்றுள்ளார்.
தற்பெருமை இல்லாததால்தான் இந்திராவும் ஜே.கே.ரௌலிங்கும் அடுத்தடுத்து செயலாற்றலுடன் வாழ்ந்து சாதித்து வருகின்றனர். தற்பெருமைக்குணம் இல்லாததால் அடுத்தவர் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளார்? அதிர்ஷ்டக்காரர் அவர்? என்றெல்லாம் பிறரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
`பொறாமைக் குணம் உள்ளவன் நரகத்திற்குத்தான் போவான்' என்கிறது புனித பைபிள்.
தற்பெருமையும், பொறாமைக்குணமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இருந்து மனிதனைச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.
தற்பெருமையும் பொறாமைக் குணமும் மனிதனை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தும் சக்திகள். இவ்விரண்டையும் நமக்குள் குடியேற விடவே கூடாது.
நம்மைப் பற்றி தன்னம்பிக்கையுடன் சிந்தித்தும், கண்ணாடி முன்பு நின்று நம்பிக்கையான வாக்கியங்களைச் சொல்லியும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது தவறில்லை. ஆனால், பெற்றுள்ள வெற்றிகளையே எப்போதும் நினைத்து தற்பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தால் நம்முடைய செயலாற்றலுக்குத் தடை போடுகிறோம்.
இதனால் இன்னொருவரின் வெற்றி, வசதி பற்றி பொறாமைப்பட நேரிடும்.
தற்பெருமை, தோல்வி மனப்பான்மை, பொறாமை, மனக்கவலை இந்த நான்கும் எழாமல் பார்த்துக் கொண்டதால்தான் ரோஜர் பெடரரால் 14-ஆவது, 15-ஆவது ஸ்லாம் பட்டங்களைப் பெற முடிந்தது. முதல் 13 பட்டங்களைவிட இந்த இருபட்டங்களுக்கும் மிக அதிகமாக அவர் கடுமையாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனக்கவலை, வசதிக்குறைவு போன்றவற்றைத் தகர்க்க தொடர்ந்து செயல்பட்டால்தான் வெற்றி உண்டு. இதே வெற்றிச் சூத்திரத்தையே பயன்படுத்தி தற்பெருமையும், பொறாமைக்குணமும் தலைதூக்கும்போது தொடர்ந்து செயல்படுவதில் அக்கறையாக இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியும் வெற்றியும் தொடரும் என்பது உறுதி.