சனி, 15 நவம்பர், 2008

கச்சத்தீவு - இலங்கை, இந்தியா


1974 ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால், இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப் பட்டது. அன்று ஆரம்பித்தது தமிழக மீனவர்களின் கெட்ட காலம்.

சௌராஸ்டிர கடல் பகுதி குஜராத் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் கடற்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள நமது மீனவர்கள் சில சமயங்களில் கடல் எல்லை அறியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்வதுண்டு,அப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருமுறை கூட சுட்டுக் கொன்றதில்லை. இந்தியாவின் பரம எதிரியாகப் பார்க்கப் படும் பாகிஸ்தனிடம் இருக்கும் மனித நேயம் நமது நட்பு நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையிடம் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.

இலங்கை கடற் படையினரின் இந்த போக்கு கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்கை கடற்படையினரால் 300க்கும் அதிகமான மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள மீன்பிடி உபகரணங்கள்,வலைகள் சேதப்படுத்த்ப்பட்டுள்ளன. பல மீனவர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளனர் இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். இதுமட்டுமல்லாது ஏராளமான கண்ணி வெடிகளையும் கடல் நீரில் இலங்கை கடற்படை மிதக்க விட்டுள்ளது.

அதே வேளையில், தமிழக மீனவர்கள் வெடிப்பொருட்கள், டீசல் மற்றும் சில பொருள்களை கடத்தி விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கின்றனர் என்ற கருத்தும் இலங்கை அரசால் முன் வைக்கப் படுகின்றது.

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பிரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது.

அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், இந்துமாக் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம் என்று பண்டாரநாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.

கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்வதில்லை என்பதே உண்மை.

சிறிய நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும் என்பதால் தேசத்தின் பாதுகப்புக்காக தமிழக மீனவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கச்ச தீவை மீட்போம் என்று பல காலமாய் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை