வியாழன், 27 நவம்பர், 2008

திருமாவளவன் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் - எனது பார்வையில்


தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களே,

தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டமும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் உங்களுடைய சமீபத்திய செயல் பாடுகளில் இரண்டு தேவையற்றவையோ எனத் தோன்றுகின்றது.

முதலாவதாக உங்கள் கட்சியின் சார்பில், இலங்கை தமிழர் துயரம் குறித்த ஓவிய கண்காட்சி தமிழ் உயிர் என்ற பெயரில் சென்னையில் புதன்கிழமை துவங்கி நட்ந்து வருகின்றது. நல்ல முயற்சி, இதன் மூலம் இலங்கை தமிழர் துயரம் குறித்த புரிதல் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும். அதே நிகழ்ச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவையும் கொண்டாடியுள்ளீர்கள். இதன் மூலம் எதைக் காரணாமாக வைத்து இலங்கைத் தமிழர் ஆதரவை முடக்கிப் போடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றோருக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இதன் மூலம் உங்களைக் கைது செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதோடு தமிழக முதல்வருக்கும் ஒரு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளீர்கள்.

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டடுவதன் மூலம் ஒன்றும் நடந்து விடப்போவது இல்லை. தேவையில்லாத குழப்பம் மட்டுமே மிஞ்சும். இதை இலங்கை தமிழர்கள் கூட விரும்ப மாட்டார்கள். எனவே இவற்றை விடுத்து நமது பிரதமரை சந்திக்கப் போகும் 4ம் தேதியன்று உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள். ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்ட 'இந்திய-இலங்கை' ஒப்பந்ததை சிங்கள அரசு கிழித்து எறிந்ததையும், தொடர்ந்து மீறப்படும் மனித உரிமை மீறல்களையும் எடுத்துக் கூறுங்கள். நமது அயல் நாட்டுக் கொள்கை இந்திய நலன் சார்ந்து இருக்க வேண்டும் என்றாலும் இலங்கைத் தமிழர் நலனும் பேணப் படவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உடனடியாக போர் நிறுத்தம் செய்யப் பட என்றும், ஏ.ஜி. பார்த்த சாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற தமிழர் நலன் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களை வெளியுறவுச் செயலாளர்களாக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, சமீப காலமாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தான் காரணமென்பது. இது தொடர்புடைய புலிகள் அமைப்பினரே " அமாம், தவறு நடந்து போச்சு பழச பத்தி பேசாதிங்க"ன்னு சொன்ன பிறகும் " ராஜீ கந்தியை புலிகள் கொல்லவில்லை என்று நீங்கள் கூறிக் கொண்டு இருப்பது இந்திய நீதித்துறையே சரியாக செயல்பட வில்லை என்று சொல்வதைப் போல் உள்ளது. மேலும் இது போன்ற உங்களது பேச்சுக்கள், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஞானசேகரன் போன்றோருக்கு இலங்கை தமிழர் எதிர்ப்பு அரசியல் செய்யத்தான் உதவுமே தவிர, இதனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.


வாழ்த்துகளுடன்.