வியாழன், 20 நவம்பர், 2008

ஐரோப்பிய நாடுகளின் ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை?

ஜி.எஸ்.பி.+ என்பது சிறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பால் வழங்கப்படும் வரிச் சலுகையாகும். இச்சலுகையைப் பெற்ற நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது வரி ஏதும் செலுத்தாமல் அல்லது குறைந்த வரிகளைச் செலுத்தி ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இச்சலுகையைப் பெற்றுள்ள 15 நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதனால் ஏனைய நாடுகளுடன் வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் போது இந்நாடுகள் சாதகமான நிலையினைக் கொண்டுள்ளன.

ஜி.எஸ்.பி.+ சலுகையை அனுபவித்து வரும் நாடுகள் அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப் பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை ஏறுறுக் கொண்டு கடைபிடிக்க வேண்டும், அவற்றை கடை பிடிக்கத் தவறும் நாடுகள் ஜி.எஸ்.பி.+ சலுகைகளைக் இழக்கும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் இவ்வருட இறுதிப்பகுதியுடன் முடிவடைய இருப்பதால் அதனை 2009 ஜனவரியில் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுககு நீடிக்கச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இலங்கையில் தனி மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இலங்கை இச்சலுகையை இழக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையின் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் நீக்கப்படுமானால் ஐரோப்பிய சந்தையில் ஏனைய உலக நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது இலங்கைக்கு எளிதான காரியமல்ல. ஏனெனில் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிகோ, வியட்நாம் போன்ற நாடுகளை இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிக மனித வளத்தினையும் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்பையும் கொண்டிருப்பதால் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலுள்ளன. இதனால் இந்நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிடுவது இலங்கைக்கு மிகவும் கடினமான ஒன்று.

மேலும்,தொடரும் பொருளாதார பின்னடைவு, உயர் பணவீக்கம், உயர் உற்பத்தி செலவு போன்ற காரணிகளால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகளை இலங்கை இழக்குமானால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் இன்னும் அதிகரித்து இலங்கை தனது சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடும்.