வெள்ளி, 12 டிசம்பர், 2008

புதையுண்டு போன அசிங்கப் பக்கங்கள்!


கட்டுரை ஆசிரியர் : விதரன்
நன்றி : ஜூனியர் விகடன்

தமிழக அரசியல்வாதிகளை, 'கோமாளிகள்' என இலங்கை ராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா இழிவாக விமர்சித்தமை தமிழகத்தில் பெரும் கொதிப்பு உணர்வைக் கிளறி விட்டிருந்தாலும், அது இலங்கையில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் புதிதாகப் பெரிய கோபம் எதையும் ஏற்படுத்தவே இல்லை.

பேரினவாதத்தை நம்பி அரசியல் நடத்தும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை சுற்றி இத்தகைய இனத் திமிர்க் கொழுப்பேறிய அதிகாரிகளே நிலைகொண்டிருப்பதால், அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்! இதில் புதிதாக விசனப்படுவதற்கு ஏதுமில்லை என்பதே இங்குள்ள நிலைமை.

யார் இந்த சரத் ஃபொன்சேகா?

இலங்கை ராணுவத்தில் 1970 பிப்ரவரி 5-ம் தேதி சேர்ந்து, இப்போது 38 ஆண்டுகள் ராணுவ சேவையைப் பூர்த்தி செய்துவிட்ட இவருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் அநாகரிகமான, முரட்டுத்தனமான, ஒழுக்கக்கேடான விடயங்கள் அடங்கிய பக்கங்கள் பலவாகும்!

பேரினவாதத்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் போலவே, பேரினவாதம் பேசி செல்வாக்குத் தேடும் மூன்றாம் தர ராணுவ அதிகாரிகள் வரிசையில் முன்னிலை வகிப்பவர் ஃபொன்சேகா!

பூர்வாங்கப் பயிற்சியின் பின்னர் 1971 ஜூனில் தம்முடைய 21 வயதில் இரண்டாம் லெஃப்டினென்ட் ஆக இலங்கை ராணுவத்துக்குள் உள்வாங்கப்பட்டார் ஃபொன்சேகா. அன்று முதல் 2005-ல் ராஜபக்ஷே ஜனாதிபதியான இரண்டு வார காலத்தில் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது வரையான, சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட ஒழுக்காற்று விசாரணைகள் பலப்பல!

அளவுக்கு அதிகமாக மது அருந்தி அட்டகாசம், பெண்களோடு ஒழுக்கக் கேடாக நடந்தமை, அதிகார துஷ்பிரயோகம், இனத் துவேஷமாக செயற்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கும் மற்றும் ராணுவ ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளுக்கும் ஆளான முரட்டு ஆசாமி இவர்!

நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் ராணுவத்தின் பிரதம அதிகாரியாகவும் பணியாற்றிய ஜெனரல் சிறில் ரணதுங்க, 1978-ல் இவருடைய நடத்தைகளைத் தாங்க முடியாமல் இவருடைய 'பர்சனல் ஃபைலில்' 'பெண்களோடு மோசமாக நடக்கும் ஆசாமி' என்று குறிப்பெழுதி வைத்தார்.

2004-ம் ஆண்டில் இவர் யாழ் ராணுவத் தளபதியாக இருந்தபோது, அவசரத் தொலைத்தொடர்புக்காக ஒரு 'சட் லைட்' தொலைபேசியை அவருக்கு ராணுவம் வழங்கியிருந்தது. ஆனால், அடுத்த ஓரிரு மாதங்களில் அந்தத் தொலைபேசிக்கான 'பில்' கட்டணம் பல லட்சம் ரூபாயைத் தாண்டியது. மேலதிகாரிகள் விசாரித்ததில், அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகளுடன் தினசரி மணிக்கணக்கில் அவர் அலட்டியதற்கான கட்டணம்தான் அது என தெரியவந்தது. இதுபற்றி அப்போதைய ராணுவத் தளபதியின் விசாரணையில் முழுவிவரமும் அம்பலமாகி, பொன்சேகாவின் முகமூடி கிழிந்தது.

எவ்வளவு குசும்பு பண்ணினாலும் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஃபொன்சேகா, எந்த அரசியல்வாதிகளின் பின்னால் போகவும் பின் நிற்காதவர் என்று பெயரெடுத்தவர்!

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த சமயம், தமக்கு ராணுவத் தளபதி பதவியை வாங்கித்தர அவரிடம் சிபாரிசு செய்யும்படி பல அரசியல்வாதிகளை நாடினார் ஃபொன்சேகா. அச்சமயம் சந்திரி காவின் வலது கை யாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இதைப் பகிரங்கமாகப் போட்டு டைத்துள்ளார்.

இயல்பாகவே தமிழர் துவேஷம் கொண்ட ஃபொன்சேகாவுக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, புலிகளுடன் அமைதிப் பேச்சுகளை நடத்தியது பிடிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்... யாழ் ராணுவத் தளபதி என்ற தம்முடைய பதவியைப் பயன்படுத்தி அமைதிப் பேச்சைக் குழப்புவது, அதன்மூலம் ரணிலின் எதிரியான ஜனாதிபதி சந்திரிகாவை கையில் போட்டு, ராணுவத் தளபதி பதவியைத் தாம் அடைவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தத் திட்டமிட்டார்.

முதலாவது எத்தனத்தில் வெற்றியீட்டிய ஃபொன்சேகாவுக்கு அடுத்த விடயத்தில் வெற்றி கிட்டவில்லை.

அமைதிப் பேச்சுக் காலத்தில் யாழ்குடா நாட்டில் போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்காக இலங்கை அரசுத் தரப்பும் புலிகளும் சேர்ந்து ஓர் உபகுழு அமைக்கப்பட்டது. அதில் யாழ் ராணுவத் தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடம் கிடைத்தது.

அமைதிப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த புலிகளை பயங்கரவாதிகள் என்றும், ராணுவம் கெடுபிடிகளைத் தளர்த்தினால், அது பயங்கரவாதி களுக்கு அரசியல் வெற்றியாகிவிடும் என ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் ஃபொன்சேகா அறிக்கையிட்டு அதைப் பகிரங்கப்படுத்தினார். இதனால் உபகுழு செயலிழந்து, அமைதி முயற்சிகள் முறிந்து போயின.

ரணிலின் அமைதி முயற்சிகளை ஃபொன்சேகா திட்டமிட்டு நாறடித்த போதிலும், அவரை சந்திரிகா தமக்குக் கிட்ட எடுக்கவில்லை. இதற்கு ஃபொன்சேகா மது மற்றும் மாது விடயத்தில் பலவீனமானவர் என்பதே காரணம் என்கிறார்கள் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

ஆனால், 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் காட்சி மாற அடித்ததுயோகம்!

மஹிந்த ராஜபக்ஷே ஜனாதிபதியாக, அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷே இலங்கையின் பாதுகாப்புத் துறையில் ஏகபோக செல்வாக்கு உடையவரானார்.

கோட்டாவும் ஃபொன்சேகாவும் இலங்கை ராணுவத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். ஃபொன்சேகா மூன்றாவது அணியில் உள்வாங்கப்பட்டவர். கோட்டா நான்காவது அணியில் வந்து இணைந்தவர். கோட்டாவின் சீனியர் அதிகாரி ஃபொன்சேகா.

அத்தோடு, கோட்டாவின் கீழ் செயற்பட்ட பல ராணுவ அணிகள், புலிகளின் கைகளில் சிக்கி அழிய, அதனால் கோட்டாவுக்கு ராணுவத்திலிருந்து முற்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு உதவியவர் ஃபொன்சேகா எனவும் கூறப் படுகின்றது.

ஓய்வுபெற்ற கோட்டாபய, அமெரிக்கா சென்று அந்நாட்டுப் பிரஜையானார். அங்கு இரவுக் காவலாளராகவும் பின்னர் உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். கோட்டாபய, அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற அதேசமயம் ஃபொன்சேகா, அமெரிக்காவில் தம்முடைய பிள்ளைகளுடன் நிரந்தரமாகத் தங்கி வாழக்கூடிய கிரீன் கார்ட் பெற்றுக்கொண்டார்.

தமையனின் (மஹிந்த) ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து, கோட்டாபய நாடு திரும்பி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க... ஃபொன்சேகா ராணுவத் தளபதியானார். அந்தக் கூட்டுதான் இப்போது சக்கைப்போடு போடுகின்றது!

இவ்வளவு அட்டகாசம், அராஜகம் பண்ணும் ராணுவத் தளபதியை அண்ணன் மஹிந்தாவும் தம்பி கோட்டாபயவும் மற்றைய இலங்கை அரசுத் தலைவர்களும் ஏன் சகித்துக் கொள் கின்றார்கள் என்ற கேள்வி நியாயமானதே!

இலங்கை இன்று மோசமான மனித உரிமை மீறல் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. வெள்ளை வானில் வந்து அநாயாசமாக ஆட்களைக் கடத்துவது, கடத்தியோரைப் பணயமாக வைத்து கப்பம் அறவிடுவது, சட்டவிரோதப் படுகொலைகள் என்று பல்வேறு அராஜகங்களும் கொடூரங் களும் புலி எதிர்ப்புப் போரின் பெயரால் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!

இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுவது யார் என்பது 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல, அவற்றை முன்னெடுத்துவரும் அண்ணன் - தம்பி ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இப்படித் தனக்குக் கீழ் ரகசிய அணிகளை வைத்து ஒப்பேற்றும் ஒரு ராணுவத் தளபதிக்கு எதிராக, ஆட்சித் தலைமை எப்படி நடவடிக்கை எடுக்கும்?!

ஆக, இலங்கை ராணுவத் தளபதியின் வெறித்தனமான மேற்படிப் பேச்சுக்கு எதிராக இந்தியத் தலைவர்கள், குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் எந்தளவுக்குக் கிளர்ந்து எழுந்தாலும், ஆகப்போவது ஒன்றுமில்லை!

தம்முடைய மிக நெருங்கிய கூட்டாளியான கொழும்புக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் வழமையான தம்முடைய தனிப்பட்ட நட்புறவுச் சந்திப்பின்போது, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் வருத்தம் தெரிவித்தார் என்று வெறும் வாய்ப்பந்தலோடு இந்த விடயம் அடங்க வேண்டியது தான். இதற்கு அப்பால் இவ்விவகாரத்தில் கொழும்பில் எதுவும் நடக்காது என்பது நிச்சயம்! ஏனென்றால், அரசுத் தலைமை யிடம் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு இருக்கும் செல்வாக்கு அத்தகையது..!

சனி, 6 டிசம்பர், 2008

மும்பை தீவிரவாதிகளும் சாட்டிலைட் செல்போனும்


ராணுவத்தில் மட்டுமே அதிகம் பயன் படுத்தப் பட்டு வந்த சாட்டிலைட் போன் இப்பொழுது பயங்கரவாதிகளும் விரும்பும் சாதனமாக மாறியுள்ளது. மும்பை தீவிரவாதிகள் செல் போனுடன் சாட்டிலைட் போனையும் தங்களின் தகவல் தொடர்புக்கு பயன் படுத்தி உள்ளனர்.

சாட்டிலைட் போனும் செல் போனைப் போல்தான், ஆனால் அவை தகவல் தொடர்புக்கு செல் போன்களைப் போல் செல் போன் டவர்களைப் பயன்படுத்துவது இல்லை, மாறாக அவற்றின் ஒலியலைகள் சாட்டிலைட் மூலமாக செல்கின்றன.

செல் போனுடன் ஒப்பிடும் போது சாட்டிலைட் போன்களின் அளவும், எடையும் மிகவும் அதிகம். போனுடன் சிறிய ஆன்டென்னாவும் இணைக்கப் பட்டு இருக்கும்.

இப்பொழுது வெளிவந்துள்ள நவீன சாட் போனின் அளவு, 10 ஆண்டுகளுக்கு முன் வந்த செல் போன்களைப் போல் இருக்கும்.சாட் போனின் விலையும் அதிகம். பழைய மாடல் போன்கள் 10,000 ரூபாயிலும், புதிய மாடல்கள் 50,000 ருபாயிலும் கிடைக்கின்றது.

ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற குழுமங்கள் செல் போன் சேவையை வழங்குவது போல் சாட் போன் சேவையையும் க்ளோபல் ஸ்டார்,இரிடியம் மற்றும் துரயா என்ற மூன்று நிறுவனங்கள் வழங்கு கின்றன. இவற்றுள் துரயா நிறுவனம் மட்டுமே உலகம் முழுவதுமான சேவையை வழங்கு கின்றது.

மலை உச்சி, பாலைவனம் மற்றும் நடுக்கடல் இவை எவற்றில் இருந்தும் உலகின் எந்த மூலைக்கும் சாட் போனின் மூலம் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். நாம் செய்யும் கால்களின் மதிப்பும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.ஒரு நிறுவனத்தின் சாட் போனை வேறொரு நிறுவனத்தின் சேவைக்குப் பயன் படுத்த முடியாது. மும்பை தீவிரவாதிகள் துரயா சேவையையே பயன் படுத்தி உள்ளனர்.

சில நிறுவனங்கள் சாட் போனை வாடகைக்கும் கொடுக்கின்றன. ஒரு வாரத்திற்கான வாடகை 1200 ரூபாய் முதல் 2000 வரை.

சாட்டிலைட் போன் நிறுவனங்கள், ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு நிமிடத்திற்கு 7 ரூபாய் முதல் 99 ரூபாய்வரை வசூலிக்கின்றன. சாட் போனில் இருந்து லேன்ட்லைன் அழைப்பு மிக மிக அதிகம், ஒரு நிமிடத்திற்கு தோராயமாக 400 ரூபாய். எஸ்.எம்.எஸ் செய்தியும் அனுப்ப முடியும் அதற்கு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 25 ரூபாய்.

மும்பை தீவிரவாதிகள் கடல் வழியைப் பயன் படுத்தி உள்ளதால் சாட்டிலைட் போன்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன. அதன் மூலமே பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினருடன் பேசியுள்ளனர்.

செவ்வாய், 2 டிசம்பர், 2008

மும்பை பயங்கரவாதத்தை தடுக்க இந்த கமேண்டோ வீரர்கள் ஏன் செல்லவில்லை?

தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தம் இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும், பாரதத்திற்கு விருந்தினர்களாக வந்து எதிர்பாராவிதமாக மடிந்த அயல் நாட்டவருக்கும், தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு கடமையை செய்யும்போது வீரமரணமடைந்த காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

ஒருவேளை இந்த வீரர்கள் சென்றிருந்தால் தீவிரவாதிகளை புரட்டி எடுத்து இருப்பார்களோ என்னவோ?

கமேண்டோ வீரர் 1 : கேப்டன் விஜயகாந்த்
தீவிரவாதி சுடுகின்றானா? கவலையே இல்லை, சீறிப்பாய்ந்து வரும் தோட்டாவிலிருந்து கேப்டன் விஜயகாந்த் எப்படி தப்பிக்கிறார் பாருங்கள்.



கமேண்டோ வீரர் 2 : சிரஞ்சீவி
தப்பிச் செல்லும் தீவிரவாதியை பாய்ந்து பிடிக்கும் சிரு.



கமேண்டோ வீரர் 3 : பாலகிருஷ்ணா
தீவிரவாதிகளை தனது சக்தியால் துரத்தியடிக்கும் பாலையா.

திங்கள், 1 டிசம்பர், 2008

ஹிலாரி - இந்தியா,விடுதலைப் புலிகள்


அமெரிக்காவில் அமையப்போகும் புதிய அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஹிலாரிக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு 1995 ல் ஆரம்பித்தது. அப்பொழுது தான் தனது கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டனுடன் வருகை தந்தார். அதன் பிறகு இரண்டு முறை இந்தியா வந்துள்ள ஹிலாரி அமெரிக்க வாழ் இந்தியர்களால் மிகவும் மதிக்கப் படுபவர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஹிலாரியைப் பற்றி ஒபாமாவின் பிரசாரமே "பஞ்ஜாபில் இருந்து வந்துள்ள ஜனநாயக் கட்சி வேட்பாளர்" என்பதுதான். எனினும் இந்திய-அமெரிக்கா உறவு மிகவும் முக்கியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமாவின் கருத்துக்கு எதிராக அவுட் சோர்சிங் வேலைகளுக்கு தான் எதிரானவர் அல்ல என்று கூறியதுடன் தான் தேர்ந்தெடுக்கப் பட்டால் அவுட் சோர்சிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியவர். இந்திய-அமெரிக்க நியூக்ளியர் ஒப்பந்தத்தை ஆதரித்து வாக்களித்தவர்.


விடுதலைப் புலிகளைப் பற்றி ஒருமுறை கருத்து கூறும் போது புலிகள் தங்களது நோக்கங்களை அடையும் வழியில் தான் பயங்கரவாதம் உள்ளதே தவிர அவர்களையும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளையும் ஒன்றாக கருத முடியாது கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.




ஒபாமாவின் கொள்கைகளைத்தான் ஹிலாரி செயல்படுத்த முடியும் என்றாலும்,ஹிலாரியின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படும் என நம்பலாம்.இந்தியா - பாகிஸ்தான் முன்னெப்போதும் இல்லாத அளவில் பழுது பட்டிருக்கும் இந்நிலையில் வெளியுறவுத் துறை செயலாளராக பொறுப்பேற்க இருக்கும் ஹிலாரி எப்படிச் செயல் படப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 27 நவம்பர், 2008

திருமாவளவன் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் - எனது பார்வையில்


தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களே,

தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டமும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் உங்களுடைய சமீபத்திய செயல் பாடுகளில் இரண்டு தேவையற்றவையோ எனத் தோன்றுகின்றது.

முதலாவதாக உங்கள் கட்சியின் சார்பில், இலங்கை தமிழர் துயரம் குறித்த ஓவிய கண்காட்சி தமிழ் உயிர் என்ற பெயரில் சென்னையில் புதன்கிழமை துவங்கி நட்ந்து வருகின்றது. நல்ல முயற்சி, இதன் மூலம் இலங்கை தமிழர் துயரம் குறித்த புரிதல் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும். அதே நிகழ்ச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவையும் கொண்டாடியுள்ளீர்கள். இதன் மூலம் எதைக் காரணாமாக வைத்து இலங்கைத் தமிழர் ஆதரவை முடக்கிப் போடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றோருக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இதன் மூலம் உங்களைக் கைது செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதோடு தமிழக முதல்வருக்கும் ஒரு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளீர்கள்.

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டடுவதன் மூலம் ஒன்றும் நடந்து விடப்போவது இல்லை. தேவையில்லாத குழப்பம் மட்டுமே மிஞ்சும். இதை இலங்கை தமிழர்கள் கூட விரும்ப மாட்டார்கள். எனவே இவற்றை விடுத்து நமது பிரதமரை சந்திக்கப் போகும் 4ம் தேதியன்று உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள். ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்ட 'இந்திய-இலங்கை' ஒப்பந்ததை சிங்கள அரசு கிழித்து எறிந்ததையும், தொடர்ந்து மீறப்படும் மனித உரிமை மீறல்களையும் எடுத்துக் கூறுங்கள். நமது அயல் நாட்டுக் கொள்கை இந்திய நலன் சார்ந்து இருக்க வேண்டும் என்றாலும் இலங்கைத் தமிழர் நலனும் பேணப் படவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உடனடியாக போர் நிறுத்தம் செய்யப் பட என்றும், ஏ.ஜி. பார்த்த சாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற தமிழர் நலன் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களை வெளியுறவுச் செயலாளர்களாக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, சமீப காலமாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தான் காரணமென்பது. இது தொடர்புடைய புலிகள் அமைப்பினரே " அமாம், தவறு நடந்து போச்சு பழச பத்தி பேசாதிங்க"ன்னு சொன்ன பிறகும் " ராஜீ கந்தியை புலிகள் கொல்லவில்லை என்று நீங்கள் கூறிக் கொண்டு இருப்பது இந்திய நீதித்துறையே சரியாக செயல்பட வில்லை என்று சொல்வதைப் போல் உள்ளது. மேலும் இது போன்ற உங்களது பேச்சுக்கள், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஞானசேகரன் போன்றோருக்கு இலங்கை தமிழர் எதிர்ப்பு அரசியல் செய்யத்தான் உதவுமே தவிர, இதனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.


வாழ்த்துகளுடன்.

மறைந்தார் சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்



காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசை அமைத்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.

இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர்.

இவர் பதவிக்காலத்தில்தான், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட யாத்திரை மேற்கொண்ட அத்வானியைக் கைது செய்தவர். இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பதவியையும் இழந்தவர்.

ராஜீவ் காந்தியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய பாதுகப்புப் படை இவரது காலத்தில்தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.

திங்கள், 24 நவம்பர், 2008

இது நியாயமா கேப்டன் சார்?



திருவாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருப்பீர்கள் என்றுதான் முதலில் நினைத்தேன், அனால் நான் நினைத்தது தவறு என்று ஒவ்வொரு நாளும் நிரூபிக்கின்றீர்கள்.

லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன் என்று மேடைதோறும் முழங்குகின்றீர்கள், ஆனால் அதே மேடையில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உங்கள் கட்சியில் சேர்க்கின்றீர்களே?

வாக்கு கேட்கும் முன்னர் கொள்கை, திட்டங்கள் அனைத்தையும் தெரிவிப்பது தானே நியாயம். நீங்கள் அறிவிக்கிற லஞ்சம் இல்லாத நாட்டை அடைய என்ன வழி என கேட்பவரிடம் அது ரகசியம் என்கிறீர்கள். மக்களாட்சியின் மகத்துவமே மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பது தானே கேப்டன் சார்?

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆண்டு தமிழ்நாட்டையே குட்டி சுவரு ஆக்கி விட்டதாகச் சொல்கின்றீர்கள். ஆனால் உங்கள் கட்சியின் 'கட்-அவுட்' கலாசாரமும், உங்கள் புகழ் பாடும் போஸ்டர்களும், ஜிகினா மாநாடுகளும் உங்கள் கட்சி அவர்களுக்குச் சிறிதும் சளைத்ததில்லை என்பதைத் தானே காட்டுகின்றன.

தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற பாடின பல்லவியையே , ரேசன் பொருட்கள் வீட்டில் கிடைக்காததா இன்றைய பிரச்சனை? அப்படியானால் எப்போதும் போல ரேசன் அரிசி வாங்கி சாப்பிடும் அளவில் தான் தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இருக்குமா நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும்?

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் டாக்டர் ராஜசேகரின் கார் சிரஞ்ஜீவியின் ரசிகர்களால் தாக்கப் பட்டபோது, சிரஞ்ஜீவி ஓடிச்சென்று ஆறுதல் கூறியதுடன் மன்னிப்பும் கேட்டார். ஆனால் நடிகர் வடிவேலுவின் வீடு உங்கள் ரசிகர்களால் கல்லெறியப் பட்டபோது, பக்கத்து வீட்டில் இருக்கும் வடிவேலுவைப் பார்த்து ஒரு ஆறுதல் கூறியிருந்தால் உங்கள் இமேஜ் மேலும் உயர்ந்து இருக்குமே கேப்டன் சார்?

கடந்த வாரம் "நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை வழங்கினால் மக்களுக்காக குரல் கொடுப்பேன்" என்று கோவில்பட்டியில் பேசிவிட்டு நேராக "மரியாதை" பட ஷீட்டிங்குக்கு சென்று குரல் கொடுத்தீர்கள். அப்பொழுது சட்ட மன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. நாடளுமன்றம் செல்லும் வாய்ப்பைக் கொடுத்தாலும் இப்படித்தான் குரல் கொடுப்பீர்களா?

நீங்கள் கட்சி அரம்பிக்கும் முன்பு வரை, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிகுந்த பற்றுக் கொண்டவரைப் போல காட்டிக் கொண்ட நீங்கள், இப்பொழுது புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் சிங்கள அரசின் முயற்சியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது நீங்கள் மட்டும் தனித்தே நிற்கின்றீர்களே ஏன்?

நாளை கலைஞர் தலைமையில் கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளீர்கள். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈடுபாடு உள்ளதைப் போல காட்டிகொண்டால் காங்கிரஸ் கட்சியின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் படாமல் போய் விடுமோ என்ற பயமா?

சனி, 22 நவம்பர், 2008

ரணில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவரா?


இலங்கையின் முன்னாள் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேவைப் போல் போரை முன்னெடுக்காமல் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக் கூடியவர் என்றும், அவர் பிரதமராக இருந்த பொழுது, விடுதலைப் புலிகளும், தமிழ் தலைவர்களும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறி விட்டனர் என்ற கருத்து நிலவுகின்றது.

ரணில் பிரதமராக இருந்தபோது நார்வே நாட்டினரின் சமரசப் பேச்சு முன்னெடுக்கப் பட்டு போர் நிறுத்தமும் அமலில் இருந்தது என்பது உண்மைதான்.இன்னும் சொல்லப்போனால், ரணில் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததற்கே காரணம்கூட விடுதலைப்புலிகளின் ஆதரவால்தான்.

அதேநேரத்தில், அவர் ஆட்சிக்காலத்தில் எந்தவித அரசியல் தீர்வும் காணப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ராஜபக்சேயைப்போல தீவிரமாக விடுதலை புலிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழவில்லை என்று சொல்லலாமே தவிர, அடிப்படையில் தமிழர்ப் பிரச்சினைக்கு எவ்வித உருப்படியான தீர்வும் எட்டப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான அணுகுமுறையும் அவரிடத்திலும் இல்லை என்பதை மறுக்க முடியாது.

கடந்த வாரம், ரணில் தமிழகத்தில் உள்ள சனி பகவான் கோயில் தரிசனம் செய்யச் செய்ய வந்த பொழுது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர் வாளர்களும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்பொழுது செய்தியாளர்கள், அவரது வருகை குறித்து கேட்ட பொழுது, ஈழத்தில் சண்டை நிறுத்தம் நடைபெறவேண்டும் என்பதற்காக வழிபாடு செய்வதற்காகத்தான் கோயிலுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

ரணில் உண்மையில் சமாதானத்தையும், போர் நிறுத்ததையும் விரும்பக் கூடியவராக இருந்தால், தனது சொந்த நாட்டின் மக்கள் மீதே வெடிகுண்டு வீசப் படுவதை எதிர்த்து எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் அவரோ, அவரது கட்சியினரோ ஒரு கண்டனக் குரலாவது எழுப்பி இருக்க வேண்டுமல்லவா?

இலங்கை அரசு இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் இராணுவத்துக்கான நிதியை அதிகமாக ஒதுக்குகின்றது, ரணில் சமாதானத்தை விரும்புபவராக இருந்தால்,அதை எதிர்த்து குரலாவது கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

ராஜபக்சே, ரணில் இருவரது அணுகு முறையில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான்.

வியாழன், 20 நவம்பர், 2008

ஐரோப்பிய நாடுகளின் ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை?

ஜி.எஸ்.பி.+ என்பது சிறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பால் வழங்கப்படும் வரிச் சலுகையாகும். இச்சலுகையைப் பெற்ற நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது வரி ஏதும் செலுத்தாமல் அல்லது குறைந்த வரிகளைச் செலுத்தி ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இச்சலுகையைப் பெற்றுள்ள 15 நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதனால் ஏனைய நாடுகளுடன் வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் போது இந்நாடுகள் சாதகமான நிலையினைக் கொண்டுள்ளன.

ஜி.எஸ்.பி.+ சலுகையை அனுபவித்து வரும் நாடுகள் அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப் பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்க ஒப்பந்தங்களை ஏறுறுக் கொண்டு கடைபிடிக்க வேண்டும், அவற்றை கடை பிடிக்கத் தவறும் நாடுகள் ஜி.எஸ்.பி.+ சலுகைகளைக் இழக்கும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் இவ்வருட இறுதிப்பகுதியுடன் முடிவடைய இருப்பதால் அதனை 2009 ஜனவரியில் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுககு நீடிக்கச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இலங்கையில் தனி மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இலங்கை இச்சலுகையை இழக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையின் ஜி.எஸ்.பி.+ சலுகைகள் நீக்கப்படுமானால் ஐரோப்பிய சந்தையில் ஏனைய உலக நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது இலங்கைக்கு எளிதான காரியமல்ல. ஏனெனில் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மெக்சிகோ, வியட்நாம் போன்ற நாடுகளை இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிக மனித வளத்தினையும் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்பையும் கொண்டிருப்பதால் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலுள்ளன. இதனால் இந்நாடுகளுடன் திறந்த சந்தையில் போட்டியிடுவது இலங்கைக்கு மிகவும் கடினமான ஒன்று.

மேலும்,தொடரும் பொருளாதார பின்னடைவு, உயர் பணவீக்கம், உயர் உற்பத்தி செலவு போன்ற காரணிகளால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஜி.எஸ்.பி.+ சலுகைகளை இலங்கை இழக்குமானால் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் இன்னும் அதிகரித்து இலங்கை தனது சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

சனி, 15 நவம்பர், 2008

கச்சத்தீவு - இலங்கை, இந்தியா


1974 ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால், இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப் பட்டது. அன்று ஆரம்பித்தது தமிழக மீனவர்களின் கெட்ட காலம்.

சௌராஸ்டிர கடல் பகுதி குஜராத் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் கடற்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள நமது மீனவர்கள் சில சமயங்களில் கடல் எல்லை அறியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்வதுண்டு,அப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருமுறை கூட சுட்டுக் கொன்றதில்லை. இந்தியாவின் பரம எதிரியாகப் பார்க்கப் படும் பாகிஸ்தனிடம் இருக்கும் மனித நேயம் நமது நட்பு நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையிடம் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.

இலங்கை கடற் படையினரின் இந்த போக்கு கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்கை கடற்படையினரால் 300க்கும் அதிகமான மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள மீன்பிடி உபகரணங்கள்,வலைகள் சேதப்படுத்த்ப்பட்டுள்ளன. பல மீனவர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளனர் இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். இதுமட்டுமல்லாது ஏராளமான கண்ணி வெடிகளையும் கடல் நீரில் இலங்கை கடற்படை மிதக்க விட்டுள்ளது.

அதே வேளையில், தமிழக மீனவர்கள் வெடிப்பொருட்கள், டீசல் மற்றும் சில பொருள்களை கடத்தி விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கின்றனர் என்ற கருத்தும் இலங்கை அரசால் முன் வைக்கப் படுகின்றது.

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பிரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது.

அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், இந்துமாக் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம் என்று பண்டாரநாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.

கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்வதில்லை என்பதே உண்மை.

சிறிய நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும் என்பதால் தேசத்தின் பாதுகப்புக்காக தமிழக மீனவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கச்ச தீவை மீட்போம் என்று பல காலமாய் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை

வெள்ளி, 14 நவம்பர், 2008

இலங்கையில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தமிழினம்


இலங்கையில் தமிழர்கள் காணாமற்போவதும் கடத்தப்படுவதும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு அல்ல. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே சர்வ சாதரணமாக நடைபெறக்கூடிய பயங்கரவாத நிகழ்வு இது. அங்குள்ள தமிழர்கள் என்று நாம் கடத்தப்படுவோமோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனர். சிங்கள அரசும் ஒவ்வொருவரையும் இவன் விடுதலைப் புலிகளின் உளவாளியாக இருப்பனோ என்ற கண்ணோட்டதிலேயே பார்க்கின்றது.

மனித உரிமைகள் ஆணையம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையில் உள்நாட்டுப்போர் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளதாகவும், 2005 - 2007 ம் ஆண்டுகளில் மட்டும் 1500 பேர்கள் கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளதாகக் கூறுகின்றது.காணாமற்போனவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் ஆதவாளர்களாக இருக்ககூடும் என்று கூறும் அந்த அறிக்கை, ஆனால் அதற்கு எந்த ஆதரமும் இல்லை என்ற கருத்தையும் முன் வைக்கின்றது.

கடந்த மாதம் இலங்கை அதிபர் ராஜபக்சே, நேசனல் போஸ்ட் என்ற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், காணமற் போனவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகக் கூறியிருந்தார்.அவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் விபரங்கள் அரசிடம் இருக்குமே அவற்றை வெளியிடலாமே?

இணையத்தில் காணக்கிடைத்த கீழ்காணும் ஒளிப்படம், இலங்கையில் நிலவும் ஒரு நிச்சயமற்ற சூழலை விளக்குகின்றது. இது ஒரு வருடத்திற்கு முன்னால் தயாரிக்கப் பட்டு இருந்தாலும், இன்றும் பொருந்திவரக் கூடியதாகவே உள்ளது.

http://www.youtube.com/watch?v=poYN8ikai60





வெள்ளி, 7 நவம்பர், 2008

அகலக்கால் வைக்கிறாரா அனில் அம்பானி?


இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தித்தாள்களில் அனில் அம்பானியைப் பற்றி ஒரு செய்தி. கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் டெக்கான் கார்கோ நிறுவனத்தில் அனில் அம்பானி 33% முதலீடு செய்யவிருக்கின்றார் என்பதே அது.33% முதலீடு என்பது ஏற்க்குறைய 350 கோடி, இது சிறிய முத்லீடு அல்ல. இருந்தாலும் முதலீட்டார்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடையே எவ்வித முக்கியத்துவமும் பெறவில்லை. வணிகப் பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி உள்ப்பக்கங்களிலேயே இடம் பெற்றிருந்தது. அனில் அம்பானியின் அறிவிப்புகளுக்கு மக்களோ மற்றும் பத்திக்கைகளோ எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என்பதையே இது காட்டுகின்றது.

கடந்த காலங்களில் அனில் இது போன்ற பல அறிவிப்புகளை செய்துள்ளார். சில காலங்களுக்கு முன்பு சிமென்ட் துறையில் கால் பதிக்க இருப்பதாகவும் இதற்காக மத்திய பிரதேசத்தில் 1306 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் அம்பானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேசன் அன்டு கம்யூனெகேசன் டெக்னாலஜி நிறுவப்படும் என்றும் இந்த இரண்டு திட்ட்ங்களுக்கும் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ள்ளதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

அறிவிப்பு செய்யப்பட்ட மற்றொரு திட்டம் கப்பல் துறையைப் பற்றியது. 2000 கோடி முதலீடு என்று அறிவிப்பு செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்தோனேசியாவில் இருந்து ஆந்திராவுக்கு நிலக்கரி எடுத்து வரப்படும் என்றும் ஆரம்பத்தில் ஆறு கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. 40,000 கோடி முதலீடு என்று அறிவிப்பு செய்யப்பட்ட மற்றொன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் ஆரம்பிக்கப் பட இருப்பதாக கூறப்பட்ட இரும்பு ஆலை. இது எல்லாவற்றையும் விட அனில் அறிவித்த பெரிய திட்டம் பொழுதுபோக்கு துறையில் அவர் முதலீடு செய்ய இருப்பதாக கூறிய 1.5 பில்லியன் யுஸ் டாலர். ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பர்க்குடன் இணைந்து அடுத்த் 5 வருடங்களில் 35 திரைப்படங்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதுபோல் அறிவிப்பு செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியல் தொடர்ந்து கொன்டே இருக்கின்றது.

நமது இலட்சியங்களுக்கும் ஆசைகளுக்கும் வானமே எல்லை, அதுவும் அனிலைப் போன்ற தொழிலதிபர்களுக்கு பெரிய இலட்சியங்கள் இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆனால் அந்த இலட்சியங்கள் ஒரு தெளிவான கால அட்டவணையுடனும் திட்ட அறிக்கையுடனும் இருப்பது நலம். அனிலின் பெயருக்குப் பின்னால் "அம்பானி" என்றொரு மற்றொரு பெயருமிருப்பதால் தான் பத்திரிக்கைகளில் அவரது அறிவிப்புகள் பிரசுரம் ஆகின்றது. இல்லையென்றால் பிரசுரம் ஆகுமா என்பது கூட கேள்விக்குறிதான்.
முக்கியமாக, அனிலின் கடந்த கால திட்டங்கள் தெளிவாக இல்லாததால் மக்களும் அவரது அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அறிவிப்பு செய்யப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட "ரிலையன்ஸ் இன்ப்ராடெல்" ஐபிஒ

அனில் இதைப் புரிந்துகொள்வாரா?

வியாழன், 6 நவம்பர், 2008

விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்து விட்டனரா?


விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டதாகவும் சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அலுவலகம் உள்ள கிளிநொச்சியை நெருங்கி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

இரண்டு வாரதிற்கு முன்பு சிங்கள ராணுவத்தின் ராணுவத் தளபதி, ராணுவம் கிளிநொச்சிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். சமீப காலங்களில்சிஙகள ராணுவம் குறிப்பிடத் தக்க அளவில் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது உண்மைதன். சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. சிஙகள ராணுவம் அண்மையில் தான் பிடித்த பகுதிகளைக் கொண்டு, புலிகலின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.

சிஙகள ராணுவம் இதைப் போன்றதொரு வெற்றியை இதற்கு முன்னாலும் பெற்றுள்ளது.குறிப்பிட்டு சொல்லவேன்டுமென்றால், 1999ல், புலிகள் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தங்களின் பலத்தை நிரூபிததனர். சிஙகள ராணுவத்தின் வெற்றி அவ்வளவு எளிதில் கைவரக் கூடியது அல்ல. அதற்கு பல காரணங்களை கூறமுடியும்.

புலிகளை ஒழிக்க வேண்டுமானால் ராணுவம் பல தடைகளை கடக்கவேண்டும்.கிளிநொச்சியை நோக்கியை நோக்கி முன்னேறும் சிங்கள ராணுவம் புலிகளின் தாக்குதலை முறியடித்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் புலிகளிடம் இழந்து விடாமல் தொடந்து பாதுகாக்க வேண்டும், அதே வேளையில்,கொழும்பு மற்றும் தெற்கு பகுதிகளை கரும்புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேன்டும்

சிஙகள ராணுவம் தன்னை குறிப்பிடதக்க அளவில் பலப்படுத்திக் கொண்டுள்ளது, படை வீரர்களின் எண்ணிக்கையிலும் (100,000 ல் இருந்து 160,000)ஆயுதங்களின் எண்ணிக்கையிலும். புலிகளின் கடற்படை மற்றும் வான்படையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிங்கள ராணுவம் எண்ணிக்கையில் அதிகமான வீரர்களைக் கொண்டிடுந்தாலும், புலிகளிடம் இருக்கும் போர்க்குணம் ராணுவத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. படையில் இருங்து தப்பிச் செல்லும் வீரர்களின் எண்னிக்கையும் அதிக அளவில் உள்ளது. அதே வேளையில், சிங்கள அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலும் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், இந்தப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும் கண்காணிக்கவும் அதிக அளவிலான ராணுவத்தினர் பணிக்கப்பட்டுள்ளனர்.

புலிகள் இது வரை தங்கள் பலத்தை முழு அளவில் பயன்படுத்த வில்லை. எதிர் தாக்குதல் மட்டுமே தொடுத்து வருகின்றனர். ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் புலிகளின் கடற்படையின் பலம் இன்னமும் குறையாமல் அப்படியே இருக்கிறது. மறுபுறம் மிகவும் அடிப்படை வசதிகளை மாத்திரம் கொண்ட அவர்களின் வான்படையும் கொஞ்சம் அப்படியே கட்டுக்குலையாமல்தான் இருக்கிறது

புலிகள் தற்காப்பு தாக்குதலை விடுத்து அதிரடி தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகள் மட்டுமே அறிந்த உண்மை.

விடுதலைப் புலிகள் இழந்த நிலப்பரப்புகளை மட்டும் வைத்து மதிப்பிட்டு, அவர்கள் இராணுவ பலத்தை இழந்து விட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது